கோலாலம்பூர், டிச. 23-
ஜேசிஐ புக்கிட் பிந்தாங் இங்குள்ள தாமான் மேகா பேறு குறைந்த சிறார்கள் மையத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் இந்த மையத்தைச் சேர்ந்த 150 சிறார்கள், தொண்டூழியர்கள் மற்றும் ஜேசிஐ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பேறு குறைந்தவரான அமரர் எஸ். கே. மணிகுமார் த/பெ எஸ். கண்ணனால் தோற்றுவிக்கப்பட்டதே தாமான் மேகா பேறு குறைந்த சிறார்கள் மையம். இங்கு தங்கும் சிறார்களுக்கு ஏற்ற சுற்றுச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் இம்மையத்தை இவர் தொடங்கினார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேரோலிங், கேளிக்கை விளையாட்டு மற்றும் மாயா ஜாலம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் சிறார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன. இவற்றில் பங்கேற்று சிறார்கள் மகிழ்ச்சியும் குதூகலமும் அடைந்தனர்.
சாந்தா கிளவுஸிடமிருந்து பரிசுகள் பெற்றது இவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஅனைவருக்கும் சுவையான உணவு வகைகள் பறிமாறப்பட்டன.
ஜேசிஐ புக்கிட் பிந்தாங் 10,419.68 வெள்ளியைத் திரட்டி இந்த மையத்திற்கு நன்கொடையாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவரின் திறன் மற்றும் பின்னணியைப் பாராது அனைவரும் சிறந்த மற்றும் மனநிறைவான வாழ்க்கையைப் பெறத் தகுதி பெற்றவர்கள் என்று ஜேசிஐ புக்கிட் பிந்தாங் 2024 தலைவர் இரிக் இயோ தெரிவித்தார்.
பேறு குறைந்த சிறார்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்பதே ஜேசிஐ புக்கிட் பிந்தாங் 2024 இன் பிரதான இலக்கு என்று இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழு தலைவரும் சமூக பிரிவின் உதவி தலைவருமான கேத்ரின் லியோங் கூறினார்.
மக்களுக்குச் சேவையாற்றுவதோடு இவர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வ எண்ணங்களை விதைப்பது முக்கியம் என்றார்.
இந்த அமைப்புடன் இணைந்து சேவை செய்ய விரும்புவோர் secretary.jcibb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி வழி தொடர்பு கொள்ளலாம்.

