கோலாலம்பூர், டிச.27-
‘பீ மாய் பீ மாய் தங் தூ’ நகைக்சுவை தொடர் வழி உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கலைஞர் சத்தியாவின் மருத்துவ செலவீனத்திற்கு உதவும் வகையில் மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியம் (ஃபினாஸ்) ‘ஜியாரா செனி மடானி ஃபினாஸ்’ திட்டத்தின் வழி நிதியுதவியை வழங்கியது.
இந்த நிதியை சத்தியாவின் வீட்டிற்கு நேரில் வருகை புரிந்த தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அவரிடம் வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் ரொக்கம் மற்றும் உணவு கூடையையும் துணையமைச்சர் தியோ நீ சிங் சத்தியாவிடம் ஒப்படைத்தார். ஃபினாஸ் தலைவர் கமால் ஒத்மானும் உடன் சென்றார்.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட சத்தியா மருத்துவ சிகிச்சைக்காக வாரம் மூன்று முறை சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வொரு முறையும் இவருக்கு 200 வெள்ளி தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
“ஃபினாஸ் ஜியாரா செனி மடானி நிதி எனது மருத்துவ செலவீனங்களைக் குறைக்க உதவியுள்ளது. இதற்காக நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்” என்றார் சத்தியா.
கடந்த ஜூலை மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சத்தியா கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டது.
வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இதுவரை 48 கலைஞர்கள் ஃபினாஸ் ஜியாரா செனி மடானி நிதியுதவியைப் பெற்றதாக தியோ சொன்னார்.
அடுத்த ஆண்டு குறைந்தது 100 கலைஞர்களுக்கு இந்நிதியை வழங்க ஃபினாஸ் திட்டமிட்டிருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

