Site icon அநேகன்

ஐயப்ப பக்தர்களுக்கு சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் சிறப்பு வழித்தடம் தேவை!  -டாக்டர் குணராஜ் வேண்டுகோள்

கிள்ளான், டிச. 27-

சமய நெறிக்கேற்ப பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேர்த்திக் கடனைச்செலுத்த சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்தித் தருவது குறித்து போக்குவரத்து அமைச்சு,மலேசியன் ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், குடிநுழைவுத் துறை மற்றும் விமான நிறுவனங்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரைசுமார் 50,000 ஐயப்ப பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக மலேசியாவிலிருந்து இந்தியா செல்லவிருக்கின்றனர்.

அவர்களின் பயணம்எளிதாகவும் சீராகவும் அமைவதற்கு இந்த சிறப்பு வழித்தடம் மிக அவசியம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் வலியுறுத்தினார்.

மலேசிய ஐயப்ப சேவை சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.யுவராஜாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இந்த வேண்டுகோள்முன்வைக்கப்பட்டதாக குணராஜ் குறிப்பிட்டார்.

நேர்த்திக் கடனைச் செலுத்த விரும்பும் ஐயப்ப பக்தர்கள் 48 முதல் 60நாட்கள் வரை விரதமிருப்பது, காலணி அல்லது செருப்புகளை அணிவதைத் தவிர்ப்பது, கருப்பு வேட்டியை மட்டும் அணிவது, சைவ உணவுகளை மட்டுமே உண்பது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்.

மேலும், இந்த யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலோர் முதியவர்களாக உள்ளனர். அவர்களின் பயணம் சௌகர்யமாக அமைவதைஉறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பு தடத்தை ஏற்படுத்தித்தருவதன் மூலம் நெரிசலைக் குறைக்கவும் பயண நடைமுறைகளை விரைவாக முடித்து அவர்கள் எளிதாக விமானத்திற்குச் செல்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும் வகை செய்யும் என்று குணராஜ் கூறினார்.

இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இந்த வருடாந்திர புனித யாத்திரையை சீராக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும் என்பதோடுபக்தர்களுக்கு ஆதரவும் உரிய மரியாதையும் தரும் விதமாகவும் அமையும்என்றும் அவர் விவரித்தார்.

இதன் பொருட்டு மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு தடத்தை ஏற்படுத்தி தரும்படி ஐயப்ப பக்தர்கள் சார்பில் தாம் அரசாங்கம் குறிப்பாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கை குணராஜ் கேட்டுக் கொண்டார்.

-நன்றி சிலாங்கூர் கினி

Exit mobile version