Site icon அநேகன்

கடைகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்த தடை விதிப்பதா?   மந்திரி புசாரிடம் வர்த்தகர்கள் மகஜர்

ஈப்போ, டிச. 31- தங்கள் கடைகளுக்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்குத் தடைவிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று மாநில மந்திரி புசாரிடம் மகஜர் ஒன்றை வழங்கினர்.

இவர்கள் அனைவரும் சுங்கை சிப்புட் நகரில் நீண்ட காலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்கள் ஆவர்.

இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண கோரி மஇகா சுங்கை சிப்புட் தொகுதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் மணிமாறன் கிருஷ்ணன் தலைமையில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மாநில மந்திரி புசார் அலுவலகத்தில் இந்த மகஜரை வழங்கினர்.

இப்பகுதியில் பொதுப் பணி இலாகா கடந்த சில வாரங்களாக சாலை சீரமைப்பு மேற்கொண்டது. அக்கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வணிகர்களின் நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியதால் வணிகர்கள் பலர் இழப்பை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்விவகாரத்திற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று வியாபாரிகள் மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்த அளவிலேயே வருமானத்தை ஈட்டி வரும் தங்களுக்கு இது மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று ஜவுளி வியாபாரியான சங்க நதி நிறுவனத்தின் உரிமையாளர் த. தனபாலன் விவரித்தார்.

வாகனங்களை  நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்று இவர் கேட்டுக் கொண்டார்.

பொருட்களை வாங்குவதற்காக மக்கள் தனது கடையின் முன் காரை நிறுத்தினாலே போலீஸ்காரர்கள் அபராத நோட்டீஸ் வழங்குகிறார்கள். இது பெரும் வேதனை அளிக்கிறது என்று அப்பகுதியில் பூமாலைகள் தொடுக்கும் வியாபாரம் செய்து வரும் ஸ்ரீ பாமா தெரிவித்தார்.

இதனால் அண்மைய காலமாக தமது வியாபாரம் பெருமளவில பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு   மாநில அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

 

 

 

Exit mobile version