Site icon அநேகன்

நஜீப்பிற்கு ஆதரவாக மஇகா பிரார்த்தனை: ஜன. 6 பத்துமலையில் நடைபெறும் -டத்தோஶ்ரீ எம். சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜன. 4-முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக மஇகா வரும் 6ஆம் தேதி பத்துமலை முருகன் ஆலயத்தில் பிரார்த்தனையை மேற்கொள்ளவிருக்கிறது.

இந்தச் சிறப்பு பிரார்த்தனை காலை மணி 11.00க்கு நடைபெறும் என்று மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.

முன்னதாக புத்ராஜெயாவில் நஜீப் பிற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்ள மஇகா திட்டமிட்டது.

எனினும், புத்ராஜெயாவில் கூடுவதற்குப் பதிலாக இவருக்கு ஆதரவாக சிறப்பு பிரார்த்தனையை மேற்கொள்ள கட்சி திட்டமிட்டிருப்பதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் குறிப்பிட்டார் .

அரச மன்னிப்பு விவகாரத்தில் இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை நமது அரசியலமைப்பு சட்டத்தின் புனிதத்தன்மையை  வெளிப்படுத்தியுள்ளது.

அரசியலைப்பு சட்டம் பிரிவு 42 (1), (2) இன் கீழ் வழங்கப்பட்ட தனிச்சிறப்பு அதிகாரங்கள் தொடர்பான மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஆணையை மஇகா முழுமையாக மதிக்கிறது” என்றார் அவர்.

டத்தோஶ்ரீ நஜீப்பிற்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்தை மஇகா உட்பட பல கட்சிகள் திட்டமிட்டிருந்தன.

இவருக்கு ஆதரவாக ஒன்று கூடுவது மாட்சிமை தங்கிய மாமன்னரின் உத்தரவை மீறாத செயலாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க அனுமதித்த 16ஆவது மாமன்னரின் கூடுதல் உத்தரவையும் நாம் மதிக்க வேண்டும் என்றார்.

இதன் அடிப்படையில் வரும் திங்கட்கிழமை நஜீப்பிற்கு நியாயமான, பாரபட்சமற்ற நீதித்துறை மறுஆய்வுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவ்வகையில் இந்த முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பத்துமலை முருகன் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும்படி இந்திய சமூகத்தை சரவணன் கேட்டுக் கொண்டார்.

 

 

Exit mobile version