Site icon அநேகன்

சோள வியாபாரி விவகாரம்: மஇகா சிலாங்கூர் இளைஞர் பிரிவு&சிப்பாங் இளைஞர் பிரிவு போலீசில் புகார் 

சிப்பாங், பிப். 16-சோள விற்பனைக்கான மேசை மீது இன துவேச தன்மையிலான நோட்டீசை வைத்திருந்த வியாபாரி மீது நடவடி‌க்கை எடுக்கக் கோரி இங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இந்தப் புகாரை கோபி ராஜன் தலைமையிலான மஇகா சிலாங்கூர் இளைஞர் பிரிவினரும் சிப்பாங் இளைஞர் பிரிவினரும் இணைந்து செய்தனர்.

“இது சிறிய விவகாரம் கிடையாது. ஆகையால், இதற்கு எதிராக போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “என்றார் கோபி ராஜன்.

இன துவேச தன்மையிலான இந்த விவகாரத்தில் ஒற்றுமை துறை அமைச்சர் தலையிட்டு அந்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மஇகா சிலாங்கூர் மாநில மற்றும் சிப்பாங் தொகுதி இளைஞர் பிரிவினர் மற்றும் தொகுதியின் நிரந்தர தலைவர் டத்தோ வே. குணாளன் ஆகியோரோடு சேர்ந்து கோபி ராஜன் சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இப்புகாரைச் செய்தார்.

“சிப்பாங், கோத்தா வாரிசானில் நடந்த இச்சம்பவத்தை சாதாரண விவகாரம் என அப்படியே விட்டுவிட முடியாது. இதற்குத் தக்க நடவடிக்கை தேவை”என்றார் அவர்.

அந்த வியாபாரியின் செயல் தங்களுக்குப் பெரும் வருத்தத்தைத் தருவதோடு இது தேசிய கோட்பாடு மற்றும் மலேசிய சமூக ஒற்றுமை பாரம்பரியத்திற்கு முற்றிலும் முரணானது என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ குணாளன் விவரித்தார்.

பல்லினம் மற்றும் பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மலேசியாவில் ஒருவர் மற்றவரின் பாரம்பரியத்திற்கு மதிப்பளிப்பது அவசியம். காரணம் இது நாட்டின் விலை மதிப்புள்ள சொத்து என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த விவகாரத்தைத் தாங்கள் கடுமையாகக் கருதுவதோடு தனது இச்செயலுக்காக அந்த வியாபாரி இந்நாட்டிலுள்ள இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“இது போன்ற சம்பவம் இனி வரும் காலங்களில் தொடரக் கூடாது என்ற நோக்கத்திற்காக இன்று இப்போலீஸ் புகார் செய்யப்பட்டது. இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீர்வு காண வேண்டும் ” என்றார்.

 

 

Exit mobile version