- கோலாலம்பூர், பிப். 19-
அண்மைய பத்துமலை தைப்பூசத்தையொட்டி வெள்ளி ரத ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 16 மணி நேர இடைவிடாத பாத பிடிப்பு (மசாஜ்) சேவையை வழங்கியதன் வழி மலேசிய கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் குணாளன் சின்னதுரை.
இவர் எம்பிபி கூட்டரசு பிரதேச சப் சோன் 1இன் செயலாளர் ஆவார்.
இச்சேவைக்காக குணாளனுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மலேசிய கின்னஸ் சாதனை புத்தக சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி தொடங்கி மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி வரை இந்தப் பாத பிடிப்பு சேவையில் தான் முழு மூச்சாக ஈடுபட்டதாக குணாளன் குறிப்பிட்டார்.
தைப்பூசம் குறிப்பாக வெள்ளி ரதத்தைப் பின் தொடர்ந்த பக்தர்களுக்காக பாத பிடிப்பு சேவை முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.
வெள்ளி ரதத்தைப் பின்பற்றி வெகு தொலைவுக்கு நடந்து செல்லும் பக்தர்களின் சோர்வை நீக்கி ஆன்மீக பயணத்தைத் தொடர்வதற்கு இச்சேவை உறுதுணை புரிந்ததாக குணாளன் விவரித்தார்.
“பல வயதினர் எங்களின் சேவையை நாடி வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் முதியவர்கள்.எங்களின் சேவையைப் பெற்ற இவர்கள் அனைவரும் மனநிறைவு அடைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது”என்றார் அவர்.
எங்களின் இந்தச் சேவை மலேசிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எங்களின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும் என்று அவர் மேலும் விவரித்தார்.

