மனாமா, பிப்.22-மலேசியா- பஹ்ரேன் இடையிலான 50 ஆண்டுகால உறவை மேலும் வலுப் பெற செய்யும் வகையில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நாடுவது குறித்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பஹ்ரேன் பிரதமர் சல்மான் ஹாமாட் அல் -கலிஃபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அந்நாட்டுக்கு மேற்கொண்ட வருகையானது இரு நாடுகளுக்கிடையே நிதி தொடங்கி சுற்றுலா வரை பல துறைகளில் ஒத்துழைப்பு நல்க வகை செய்துள்ளது.
பிரதமரின் இரு நாள் வருகையின்போது பகுதி குத்தகை மற்றும் கிறிப்தோ நாணயம் போன்ற வளர்ச்சி கண்டு வரும் நிதி பயன்பாட்டில் ஒத்துழைப்பு காண இரு நாடுகளும் இணக்கம் கண்டன.
“இஸ்லாமிய நிதி மற்றும் கல்வி ஆகிய துறைகளில் உடன்பாடு விரைவில் காணப்படும் வேளையில் முக்கிய துறைகள் மற்றும் சில புதிய உடன்படிக்கைகள் குறித்து வரும் மே மாதத்திற்குள் முடிவு செய்யப்படும்” என்றார் அன்வார்.
ஒரு காலத்தில் முத்து வெளியீட்டுக்குப் பேர்போன ஒரு நாடாக விளங்கியது பஹ்ரேன் .இன்று வளைகுடா நாடுகளிடையே நிலையான நிதி வளமிக்க மையமாகத் திகழ்கிறது. 400 உள்ளூர்,வட்டார மற்றும் உலகளாவிய நிறுவனங்களுடன் வலுவான நிதி சேவையைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதனிடையே, பஹ்ரேனுக்கான பிரதமரின் வருகை வரலாற்றுப்பூர்வமானது . அதே வேளையில், நாட்டிற்கு மிகப் பெரிய வெற்றிகளைக் கொண்டு வரும் என்றும் பஹ்ரேனுக்கான மலேசிய தூதர் ஷாரில் ஸாஹிரான் நம்பிக்கை தெரிவித்தார்.

