கோலாலம்பூர், பிப்.22-
இம்முறை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 2025 நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா மற்றும் 2025 கூட்டரசு அரசியலமைப்பு சட்ட (திருத்த )மசோதா தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்று தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
அமைச்சரவை இவ்வாறு முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட ஃபாமி, இவ்விரு சட்ட மசோதாக்கள் மீது பிரதமர் துறை (சட்டம் மற்றும் மறுசீரமைப்பு) அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் வரும் திங்கட்கிழமை (பிப்.24) மக்களவையில் முதல் வாசிப்புக்குக் கொண்டு செல்வார் என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
“இவற்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் மார்ச் 4ஆம் தேதி இரண்டாம் வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது” என்றார் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான ஃபாமி.
2025 நாடாளுமன்ற சேவை சட்ட மசோதா நாட்டின் முக்கிய ஜனநாயக கழகமான நாடாளுமன்றத்தில் சீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான முதல் முயற்சியாகும் என்று அறிக்கை ஒன்றின் வழி ஃபாமி குறிப்பிட்டார்.

