கிள்ளான், பிப். 23-பண்டார் செந்தோசாவில் நீண்ட காலமாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண 6 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நற்செய்தியை கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் உசேன் கூறினார்.
தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக அதிகாரப்பூர்வமாக தரம் உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இதுகாறும் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக இந்த ஒதுக்கீடு அமையும் என்றார் டத்தோ பண்டார்.
அதே வேளையில், பண்டார் செந்தோசாவாக இப்பகுதி பொருளாதார ரீதியில் இனி நல்ல மேம்பாட்டைக் காணும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
20க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளைக் கொண்ட தாமான் செந்தோசா அதன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்ஜின் பெரும் முயற்சியில் தற்போது பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேரங்காடிகள், வங்கிகள், நெடுஞ்சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட இடமாகத் திகழ்கிறது.
பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து இனி இப்பகுதியில் உள்ள வீடுகளின் விலை உயர்வு காணும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டார்.
வர்த்தக மற்றும் வேலை வாய்ப்புகளும் பெருகும். இதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என்று தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக டத்தோ பண்டாரால் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

