பெட்டாலிங் ஜெயா, பிப். 26-
தங்களின் தற்போதைய வாரத்திற்கு 42 மணி நேர வேலை நேரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்தும்படி சுகாதார அமைச்சை மலாயா தாதியர் சங்கம் (எம்என்யு) கேட்டுக் கொண்டது.
பணிச் சுமை மற்றும் நோயாளிகளைப் பாதிக்கக்கூடிய பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த வேண்டுகோளைத் தாங்கள் முன் வைப்பதாக இச்சங்கத்தின் தலைவர் சைடா அத்மான் கூறினார்.
மலேசிய சுகாதார அமைச்சில் ஷிப்ட் முறையில் பணியாற்றும் பணியாற்றுவோருக்கு வாரத்திற்கு 45 மணிநேர வேலை நேரத்தை அமல்படுத்துவதற்கு எதிராக இந்நாட்டில் 80,000 தாதியர்களைப் பிரதிநிதிக்கும் எம்என்யு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
“வாரத்திற்கு 42 மணி நேரமாக இருக்கும் தற்போதைய வேலை நேரத்தைத் தொடர்ந்து நிலை நிறுத்தும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார் சைடா அத்மான்.
”அரசாங்கம், பொதுச் சேவை துறை மற்றும் மலேசிய சுகாதார அமைச்சு ஆகியவை இவ்விவகாரத்தை பரிசீலனை செய்யும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம் “என்று எஃப்எம்டியிடம் அவர் விவரித்தார்.
இச்சாராருக்கான 45 மணி நேர வேலை நேரத்தை ஒத்தி வைக்கும்படி பொதுச் சேவை துறையிடம் சுகாதார அமைச்சு விண்ணப்பம் செய்யும் என்று இதன் அமைச்சர் சுல்கிப்ளி அகமது கூறியதாக அறியப்படுகிறது.
இதனிடையே, சில விவகாரங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு வரும் சனிக்கிழமை அமல்படுத்தசப்படவிருந்த தாதியர்களுக்கான 45 மணி நேர வேலை நேரம் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று செனட்டர் டாக்டர் ஆர்ஏ லிங்கேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.

