ஈப்போ, மார்ச் 3-இந்நாட்டில் கவலையளிக்கும் நிலையில் உள்ள நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மாநில அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் உணவில் சீனியைக் கட்டுப்படுத்த பேரா மாநில அரசாங்கம் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டதாக மாநில மனிதவளம், சுகாதாரம், மற்றும் இந்தியர் விவகார துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.
அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இங்குள்ள மாநில அரசாங்க செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
சீனி பயனீட்டைக் குறைக்கும் முயற்சியாக அரசாங்க கூட்டங்களில் சீனியில்லா உணவு வகைகள் வழங்கப்படுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2023 தேசிய சுகாதார மற்றும் நோய் கண்காணிப்பு ஆய்வு முடிவின்படி இந்நாட்டில் 32.6 % பெரியவர்கள் அதிக எடை கொண்டவர்களாகவும் 21.8% உடல் பருமனாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 50.1% ஆக இருந்த அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருந்தவர்களின் விகிதம் 2024 ஆம் ஆண்டு 54.4% ஆக அதிகரித்தது.
அதே சமயம், 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இதே போன்ற ஆய்வு வழி 60.3% அரசு ஊழியர்கள் கூடுதல் எடையுடனும் உடல் பருமனாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதன் பொருட்டு அரசு ஊழியர்கள் தங்கள் உணவில் சீனியைக் குறைக்க வேண்டும். தோசை மற்றும் காய்கறி வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
மலேசியாவில் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு தோசை என்பது மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தோசையுடன் சாம்பாரைச் சேர்த்து உண்ணும்போது சுவை ஒருபுறமிருக்க உடல் ஆரோக்கியத்திற்கும் இது உத்தரவாதம் அளிக்கிறது.
இவ்வகை உணவு அரசாங்க நிகழ்வுகளில் அவசியம் பரிமாறப்படவேண்டும் என்ற ஆலோசனையை அவர் முன் வைத்தார்.
அதிக எடை மற்றும் உடல் பருமன் பிரச்சனை அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்தார்.
ஆரோக்கியமற்ற உணவு முறையால் இரத்த சோகை, வளர்ச்சிக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளும் அதிகரித்து வருவதை சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

