Site icon அநேகன்

இந்து சமயத்தைக் கேலி செய்யும் வகையிலான காணொளி : எரா எஃப் எம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்து 

கோலாலம்பூர், மார்ச் 4-வேல் வேல் என்று பாடிக் கொண்டு புனித காவடி நடனத்தை நகைச்சு வையாகக் காட்டும் காணொளி தொடர்பில் எரா எஃப்எம் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் காணொளியின் வாயிலாக இந்து மதத்தை கேலி செய்த எரா எஃப் எம் ஊழியர்களின் முட்டாள் தனமாக செயலை மஇகா வண்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது முட்டாள் தனம் மட்டுமல்ல. மலேசியாவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கை மற்றும் மரபுகளுக்கு அப்பாற்பட்ட செயலும் கூட என்றார் .

எரா எஃப்எம் ஓர் ஊடக நிறுவனமாகும். இந்த வகையான தாக்குதல் முட்டாள்தனமானது என்பதை அதன் பணியாளர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

சமய, கலாச்சார உணர்வுகள் பற்றிய மிக அடிப்படையான புரிதல் கூட இல்லாத அவர்களின் ஊழியர்கள் ஊடகத் துறையில் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்பதை இக்காணொளி நிரூபித்துள்ளது.

இது நகைச்சுவை அல்ல.  இந்து சமூகத்தை ஆழமாகப் புண்படுத்தும் செயலாகும் என்பதை தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் சுட்டிக் காட்டினார்.

இதுபோன்ற செயல் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் மேலும் சொன்னார்.

மலேசியா பல்வேறு இனங்கள், மதங்களுக்கிடையே பரஸ்பர மரியாதை, நல்லிணக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஓர் ஊடக நிறுவனம் இதுபோன்ற செயலில் ஈடுபடும்போது அது பிரிவினையை உருவாக்கி நமது பன்முக கலாச்சார சமூகத்தின் கட்டமைப்பையே பாழ்படுத்திவிடும் என்றார்.

இதன் பொருட்டு இச்சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எரா எஃப் எம் எம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரவணன் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் எரா எஃப் எம் இந்து சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இதுபோன்ற சம்பங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த தொடர்பு  துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எரா எஃப் எம் நிறுவனத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையையும் சரவணன் முன் வைத்தார்.

 

Exit mobile version