Site icon அநேகன்

இந்துக்களைப் புண்படுத்திய காணொளி: உடனடி நடவடிக்கைக்காக  அமைச்சர் ஃபாமிக்கு பிரபாகரன் நன்றி! 

கோலாலம்பூர், மார்ச் 4-காவடி ஆட்டத்தை ஏளனப்படுத்தி வைரலான வீடியோ தொடர்பாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் எடுத்த உடனடி நடவடிக்கைக்கு மலேசிய இந்திய உருமாற்ற (மித்ரா ) குழு தலைவர் பி. பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் கலாச்சார உணர்வின்மையைக் காட்டுகிறது. இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

காவடி என்பது தைப்பூச திருவிழாவில் முருக பக்தர்களால் மேற்கொள்ளப்படும் ஓர் ஆன்மீக கடமையாகும். இது ஒரு கலாச்சார நடைமுறை மட்டுமல்ல. பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் ஆழமான வெளிப்பாடாகும் கூட என்றார்.

இதை இவ்வாறு ஏளனம் செய்து அற்பமாக்குவது இந்து சமூகத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டின் பன்முக கலாச்சார பண்பையும் மீறும் செயலாகும்.

“இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அறிவிப்பாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால், மன்னிப்பு மட்டும் போதாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்றார்.

“இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் உரிய தண்டனையைப் பெற வேண்டும். இது ஒரு சிறிய விவகாரம் அல்ல. ஒரு வெளிப்படையான, மரியாதைக்குறைவான செயலாகும்.இதில் விரிவாக விசாரிக்க எதுவும் இல்லை.வீடியோ தானாகவே பேசுகிறது” என்றார் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன்.

எரா எஃப்எம்மின் பிரதான நிறுவனமான ஆஸ்ட்ரோ, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஊடக நிறுவனங்கள் மலேசியாவின் பன்முக சமூகங்களுக்கிடையே புரிதல் மற்றும் மரியாதையை ஊக்குவிக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஆஸ்ட்ரோ அனைத்து ஊழியர்களுக்கும் கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் திறன் பயிற்சியை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

Exit mobile version