கோலாலம்பூர், மார்ச் 4-இன்று காலை சமூக ஊடகங்களில் வைரலான ஆஸ்ட்ரோ, எரா எஃப் .எம் வானொலி அறிவிப்பாளர்களின் காணொளியை உட்படுத்திய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் சாடினார்.
தொடர்பு அமைச்சர் ஃபாமி பட்சிலின் அறிக்கையின் படி, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விரிவான விசாரணையை நடத்த ஆஸ்ட்ரோ மற்றும் சம்பந்தப்பட்ட வானொலி நிலைய நிர்வாகத்தை அழைக்கும் என்றார்.
நடப்பு விதிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
“மலேசியா போன்ற பன்மைத்துவ சமூகத்தில், பரஸ்பர மரியாதை உணர்வை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். இதில், மற்ற சமயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தச் செயலையும் அறவே ஏற்றுக்கொள்ள முடியாது” என்று துணையமைச்சர் வலியுறுத்தினார்.
எந்த ஒரு மத வழக்கத்தையும் கேலி செய்யும் செயலை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதே வேளையில், வானொலி நிலையங்கள் போன்ற ஊடகங்கள் நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.

