Site icon அநேகன்

இந்தியர்களின் அசைக்க முடியாத அடையாளம் துன்  சாமி வேலு! – டத்தோஸ்ரீ சரவணன்  புகழாரம்

கோலாலம்பூர், மார்ச் 7-மறைந்த பின்னரும் அவரைப் பற்றி பேசக்கூடிய ஒரு கூட்டம் இருக்க வேண்டும். அதுதான் ஒரு சிறந்த தலைவனுக்கு எடுத்துக்காட்டு என்கிறார் மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

இப்படிப்பட்ட  உன்னத பண்பைக் கொண்டவர் தான் நம் நினைவில் வாழும் துன் ச. சாமிவேலு அவர்கள்  என்று சரவணன் புகழாரம் சூட்டினார்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான்கு முக்கிய கூறுகள் அவசியம்.

தலைமைத்துவத்தில் இருக்கும் போது ஞான செருக்கோடு இருக்க வேண்டும்.

உடன் அறிவு சார்ந்த கூட்டம் இருக்க வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டக் கூடியவர்கள்  இருக்க வேண்டும்.

பதவியில் இல்லாத போதும் கொண்டாடக்கூடிய  ஒரு கூட்டம் இருக்க வேண்டும்.

மறைந்த பின்னரும் அவரது சிறப்புகளைப் பற்றி பேசக்கூடிய கூட்டம் வேண்டும்.

இத்தகைய சிறப்புகளுக்குரியவர் தான் துன் அமரர் துன் சாமி வேலு. அவருக்காக கூடிய கூட்டம் தான் இது என்று தலைநகர் மஇகா நேதாஜி மண்டபத்தில் மறைந்த துன் அவர்களின் பிறந்தநாளையொட்டி நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்ச்சியில் தலைமை உரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

இந்நாட்டு இந்தியர்களின் அசைக்க முடியாத  ஓர் அடையாளம் துன்  சாமி வேலு என்றார்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

“தலைவன் என்பது வேறு. தலைமைத்துவம் என்பது வேறு. அவ்வகையில் சிறந்த தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக விளங்கியவர் துன் சாமி வேலு. அவரின் அடிச்சுவடைப் பின்பற்றிதான் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரனும் நானும் இப்போது கட்சியை வழிநடத்தி வருகிறோம்” என்றார்.

“கடந்த 35 ஆண்டுகளாக அவரின் பிறந்த நாளை நான்  கொண்டாடி வருகிறேன்”என்றார் அவர்.

துன் சாமிவேலுவின் 89ஆவது பிறந்த நாள் விழாவில் தகவல் அமைச்சின் முன்னாள் உயரதிகாரி டத்தோ எம்.பெரியசாமி,  தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் முதன்மை அமைப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் துன் சாமிவேலுவின் உயர் பண்புகளை சுவைபட பகிர்ந்து கொண்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தனின் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் சிறப்பு நேர்காணல் வழி தமிழ் நேசன் விளம்பர பகுதி நிர்வாகி ஞான சைமன் மற்றும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர் பிரான்சிஸ் செல்வம் துன் சாமிவேலு அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

 

 

 

 

Exit mobile version