Site icon அநேகன்

பிஎஸ்எம் போராட்டவாதி சாந்தா காலமானார்! 

கோலாலம்பூர், மார்ச் 10-சமூக ஆர்வலர், ஆசிரியர்,  மற்றும் ஜொகூர் பிஎஸ்எம் கிளையின் முக்கிய தலைவருமான சாந்தா லெட்சுமி பெருமாள் காலமானார்.

இவரின் மறைவு பிஎஸ்எம் குடும்பத்தை ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியிருப்பதாக இக்கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம் விவரித்தார் .

“சாந்தா ஒரு துணிச்சலான போராளியாவார். எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தனது முடிவில் உறுதியுடனும் இருக்கும் ஒரு தோழர். தமிழ் மொழி ஆழுமையை பெற்ற சாந்தா, அவரின் எழுத்துப் பணியின் மூலம் கட்சியில் பல படைப்புகளை எழுதியுள்ளார்” என்றார் அருட்செல்வம்.

கட்சியில் தமிழ் மொழி படைப்புகளை எழுதுவது மட்டுமல்லாமல், தமிழ் மொழிபெயர்ப்பாளாராகவும், தமிழ்ப் படைப்புகளை திருத்துபவராகவும் தனிச்சிறந்து விளங்கியவர்.

இவரும் இவரது இணையர் மோகனும் ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தை 2006-ஆம் ஆண்டில் உருவாக்கினர். மேலும், சாந்தா மலேசிய கினி ஊடகத்தில் தமிழ்ப் பிரிவிலும் பணியாற்றி உள்ளார்.

2009-ஆம் ஆண்டு, மோகனுடன் ஜொகூரில் பி.எஸ்.எம் கிளையைத் தொடங்கினார். அங்கு அவர் செயலாளராக பதவி வகித்தார். 2020-ஆம் ஆண்டு, காரைநகர் நட்புறவு மையம் தொடங்கப்பட்ட போது சாந்தா அந்த முயற்சிக்கு முன்னோடியாகவும் முதுகெலும்பாகவும் விளங்கினார்.

இந்த மையம் மாணவர்களுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய களமாக கங்கார் பூலாயில் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

மேலும், இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு நம் நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர் அகதிகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதிலும், இங்கு சோஸ்மா கைதிகளுக்கான நீதி போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற உன்னத சேவைகளில் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தியவர்.

தனது கணவர் மோகனை 1999-ஆம் ஆண்டு சாந்தா ஜொகூரில் ஆசிரியர் பயிற்சியிலிருந்த போது சந்தித்தார். போராட்ட களபணியில்தான் இவர்கள் காதலும் பூத்தது.

சாந்தா, 16 ஜூன் 1975-இல் தெலுக் இந்தானில் பிறந்தார். பெருமாள், வீட்டுக் கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் லீலாவதி ஆகியோருக்கு பிறந்த மூத்த மகள்தான் சாந்தா. இவருக்கு 4 உடன்பிறப்புகள் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக இவர்களில் மூவர் இவருக்கு முன்பே காலமாகிவிட்டனர்.

சாந்தா தனது ஆரம்பக் கல்வியை தெலுக் இந்தான் லாடாங் சசெக்ஸ் மற்றும் இடைநிலைக் கல்வியை லங்காப், டத்தோ சாகோர் பள்ளியிலும் மேற்கொண்டார்.

இவர் ஜொகூர் பாரு, முகமது காலிட் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இங்குதான் அவர் மோகனைச் சந்தித்தார். இவர்களின் திருமணம் 2001 மே 27 ஆம் தேதி மெந்தகாப், பகாங்கில் நடைபெற்றது.

சாந்தா பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஜொகூர் கங்கர் பூலாய், எஸ்.கே. சுங்காய் மற்றும் எஸ்.கே. சிலிம் ரீவர் அவரின் கடைசி பள்ளியாக அமைந்தது.

இவருக்கு 2023 இல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

இவர் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் கடுமையாகப் பாடுபட்டார்.

கடந்த ஈராண்டுகளாக சாந்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். இதனால் இவரின் எல்லா நற்செயல்களும் செயலற்று போயின.

இவர் நேற்று காலை 11:44 மணிக்கு சிலிம் ரிவர் மருத்துவமனையில் காலமானார்.

போராட்டவாதிகள் எப்போதும் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். அவ்வகையில் சாந்தாவும் நமது நினைவில் விதைக்கப்படுவார். எங்கள் போராட்டத்தில் அவர் ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார்.

வாழ்க்கை அவருக்குக் குறுகியதாகிவிட்டது ஆனால் அவருடைய செயல்பாட்டை அறிந்தவர்கள், தொடர்ந்து சாந்தாவின் வேலைகளைப்பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள்.

“தோழர் சாந்தாவிற்கும் எங்களின் வீரவணக்கங்கள். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உதவியாக இருந்து, சிறப்பாக கவனித்துக் கொண்ட அவரது இணையர் மோகன், சகோதரி ஜெயா மற்றும் பெற்றோருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார் அருட்செல்வம்.

சமூக ஆர்வலர் சாந்தாவின் இறுதிச் சடங்கு இன்று 10.3.25 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் எண் 14,ஜாலான் சிலிம் பெர்மாத்தா 4,தாமான் சிலிம் பெர்மாத்தா, பேராக் எனும் முகவரியில் நடைபெறும். தொடர்புக்கு மோகன் 017-7540597,ஜெயா 016-5587494.

 

 

 

 

 

Exit mobile version