Site icon அநேகன்

ஜம்ரி வினோத்துடனான விவாதம் தொடராது! அமைச்சர் ஆரோன் ஆகோ & போலீசாரின் ஆலோசனைக்கு செவி சாய்க்கிறேன்-டத்தோஸ்ரீ  சரவணன்

கோலாலம்பூர், மார்ச் 11-ஒற்றுமை துறை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங்   போலீசார் மற்றும்  மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் ஆகியோரின் ஆலோசனையின்  பேரில் ஜம்ரி வினோத்துடனான விவாதத்தை நடத்துவது இல்லை என்று தான்  முடிவு செய்திருப்பதாக டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இது முழுக்க முழுக்க  நாட்டின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட  முடிவாகும் என்றார் மஇகா தேசிய துணைத் தலைவரான சரவணன்.

இந்து சமயத்தை இழிவுபடுத்திய ஜம்ரி வினோத்தின் செயல் நாட்டில் உள்ள இந்துக்களின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது.

இதனால் வீட்டிலேயே மனங் குமுறுவதை விடுத்து அனைவரும் போலீசில் புகார் செய்து  தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று தலைநகர், பிரிக்ஃபீல்ட்ஸில் பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

ஜம்ரி வினோத்திற்கு எதிராக அனைவரும் போலீசில் புகார்  செய்ய வேண்டும். தங்களின் அதிருப்தியை இந்த புகாரில் இவர்கள் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைவரின்  மனம் புண்பட்டதை  அரசாங்கம்  அறிந்து  உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றார் சரவணன்.

நாட்டில் எந்தவொரு சமயத்தையும் யாரும் இழிவுபடுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

“அதே வேளையில், நாட்டின் தேசிய சமயமான இஸ்லாத்தை அனைவரும் மதிக்க வேண்டும்  என்றும் இந்த வேளையில்   அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

 

Exit mobile version