Site icon அநேகன்

மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கும் சம உரிமை வழங்குவீர்! – பிரான்சிஸ் சிவா வேண்டுகோள் 

கோலாலம்பூர், மார்ச் 12-பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பிறரிடம் கையேந்துபவர்கள் என்று இழிவாக எண்ண வேண்டாம் என்று ரவாங் தன்னிலை மாற்று திறனாளிகள் பயிற்சி மையத்தின் தலைவர் பிரான்சிஸ் சிவா கேட்டுக் கொண்டார்.

நாட்டில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிகமானோர் உள்ளனர்.

“நாங்கள் நீண்ட காலமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம்”என்றார்.

இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல கோரிக்கைகளையும் மனுக்களையும் கொடுத்துள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என்றார்.

தற்போதைய மடானி அரசாங்கத்தின் ஆட்சியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.

தலைநகர் சுற்று வட்டாரங்களில் பார்வையற்றவர்கள் நடந்து செல்வதற்காக சிறப்பு வழித் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த வழித் தடங்களில் பொறுப்பற்றவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.

இதன் காரணமாக அண்மையில் அன்பரசி என்பவர் கீழே விழுந்து கால் முறிவுக்கு உள்ளானார். இதனால் அவரின் வருமானமும் பாதிக்கப்பட்டது.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முன் ஒன்று கூடி அவர்கள் தங்களின் அதிருப்தியைப் புலப்படுத்தினர்.

பார்வையற்றவர்கள் நடந்து செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்தினால் அவர்களால் எப்படி நடந்து செல்ல முடியும் என்று பிரான்சிஸ் சிவா வினவினார்.

ஆகையால், கோலாலம்பூர் மாநகர் மன்றம் விரைந்து இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

Exit mobile version