Site icon அநேகன்

2024 மலேசிய ஊடக மன்ற மசோதா! பெரும்பான்மை ஆதரவுடன் மேலவையில் நிறைவேற்றம்

கோலாலம்பூர், மார்ச் 20- மலேசியாவில் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் நெறிமுறையான ஊடகத்தை நோக்கமாகக் கொண்ட 2024 மலேசிய ஊடக மன்ற (எம்.எம்.எம் 2024) மசோதா மேலவையில் நிறைவேற்றப்பட்டது.

எம்.எம்.எம் அமைப்பதற்கான இரண்டாவது வாசிப்பை தாக்கல் செய்த தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங், பின்னர் 17 செனட்டர்களின் விவாதத்திற்குப் பிறகு அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் அதன் சொந்த விதிகளை அமைக்க மலேசிய ஊடக மன்றம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஒரு நடத்தை நெறிமுறையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாங்கள் ஊடக மன்றத்திற்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறோம். எனவே, இம்மன்றம் சுயமாக இயங்கும் என எதிர்பார்க்கிறேன். இதில் ஏற்படும் அதிருப்தியைக் கையாள, மன்றத்தின் நடத்தை நெறிமுறையை வரையறுப்பதற்கான அதிகாரம் வழங்கப்படுவது அவசியம்.“ என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்த மசோதாவில் இரண்டு அரசாங்க பிரதிநிதிகள் உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இம்மசோதா, அரசாங்கம் மூலம் நிறுவப்பட்டு தொடர்பு அமைச்சின் கீழ் பொறுப்பு வகிப்பதாக விவரித்தார்.

“எனவே, இந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மன்றக் குழுவில் இருக்க வேண்டும். இந்த மசோதாவில் விளக்கப்பட்டுள்ளபடி, அரசாங்கப் பிரதிநிதியாக இருப்பவர் மலேசிய ஒளிபரப்புத் துறை மற்றும் பெர்னாமாவில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்” என்றார் துணையமைச்சர்.

 

 

Exit mobile version