கோலாலம்பூர், மார்ச் 22-மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் ஏற்பாட்டில் “தேசிய அளவிலான மணிமன்ற விழா” நாளை 23 ஆம் தேதி நடைபெறும்.
இவ்விழா, தலைநகர் ஜாலான் ஈப்போ, விஸ்மா கேகேபி, ஸ்டார் பெங்குவெட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதனை மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசிய தலைவர் முருகன் மணியம், மேனாள் தலைவர்களையும் இன்னாள் பொறுப்பாளர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி அழைக்கிறார்.
மலேசியத் திருநாட்டில் ஆலமரம் போல வேரூன்றி, கடந்த 69 ஆண்டுகாலமாக இந்நாட்டில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து வாழையடி வாழையாக இந்நாட்டில் வீறுகொண்டும் விவேகத்துடனும் செயல்பட்டு வருகின்றது.
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் வளர்ச்சிக்காக மகத்தான பங்காற்றிய மேனாள் தலைவர்கள், மேலவை உறுப்பினர்களின் சேவையை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக மணிமன்றத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மேனாள் தலைவர்களுக்கும் இன்னாள் தலைவர்களுக்கும் “மணிப்பட்டம்” என்ற விருது வழங்கப்படவிருக்கிறது.
அனைத்து மேனாள் தலைவர்களும் இளைஞர் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

