Site icon அநேகன்

பெண்கள் மதிக்கப்படும் வீடு வளம் பெறும்!  -விலாயா மணியம் நூல் வெளியீட்டு விழாவில் டத்தோஸ்ரீ சரவணன் பேச்சு

கோலாலம்பூர், மார்ச் 24-எந்த வீட்டில் பெண்கள் மதிக்கப்படுகின்றார்களோ அந்த வீடு வளமும் நலமும் பெற்றிருக்கும் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

கணவர் மறைந்த பின்னர் ஒரு மனைவியால் தனியாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முடியும். ஆனால், மனைவி இல்லாவிட்டால் ஒரு கணவனால் எதுவும் செய்ய முடியாது. ஆகையால் மனைவி என்பவள் போற்றுதலுக்குரியவர் என்றார் சரவணன்.

“வாழ்க்கையில் மூன்று விஷயங்கள் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. நல்ல வாழ்க்கைத் துணை,நல்ல பிள்ளைகள் மற்றும் வீடு. இவை மூன்றும் குறையற பெற்ற குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுவது நிச்சயம்” என்று விலாயா மணியம் அவர்களின் “வாழ்க்கை எனும் ஓடம்” நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, அரவணைப்பு என அனைத்து நற்குணங்களும் கொண்டவர்கள் பெண்கள். இவர்கள் பல ஆண்களின் வெற்றிக்குப் பின்னணியில் இருப்பதைக் காணலாம் என்றார்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியரும் பித்தாரா வாவாசான் இயக்கத் தலைவருமான விலாயா மணியம் மற்றும் துணைத் தலைவர் ராமன் எல்எச்கே டிரஸ்ட் வழி ஸ்ரீ சிகாம்புட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி அன்பளிப்பை வழங்கினர்.


அதோடு, உள்ளூர் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் மேற்கல்வி தொடரும் 9 மாணவர்களுக்கு தலா 300 வெள்ளியையும் இவர்கள் வழங்கினர்.

தொடர்ந்து, தனது அறப்பணியாக கொடை நெஞ்சர் பிபின் வெளிநாட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.

நூலாசிரியருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version