Site icon அநேகன்

பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு நிரந்தர நிலப்பட்டாவோடு 4000 சதுர அடி நிலம்!  -ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி டத்தோஸ்ரீ எம். சரவணன்

கோலாலம்பூர், மார்ச் 25-இந்துக்களின் ஒற்றுமையானது சர்ச்சைக்குரிய தலைநகர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு பத்ர காளியம்மன் ஆலய பிரச்சனைக்கு சுமூகமானதொரு தீர்வைக் காண வழி வகுத்திருப்பதாக மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் .சரவணன் தெரிவித்தார்.

இன்று மாலையில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலேகா முஸ்தாஃபாவோடு நடத்தப்பட்ட சந்திப்பில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு பத்ர காளியம்மன் ஆலயம் தற்போது ஆலயம் அமைந்த இடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் 4000 சதுர அடியில் அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

“இந்த ஆலயம் நிரந்தர நிலப்பட்டாவோடு புதிய இடத்திற்கு மாற்றம் காண்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஆலய பிரதிநிதி பார்த்திபனிடம் வழங்கினார்”.

இதன் வாயிலாக இந்த ஆலயம் மஸ்ஜிட் இந்தியா வாழ் பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வரும் என்றார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன்.

புதிய ஆலயம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போதைய இடத்திலேயே ஆலயம் செயல்படுவதற்கு அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

“இவ்வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கோலாலம்பூர் மாநகர மன்றம் (டிபிகேஎல்) மற்றும் ஆலயத்தைப் பாதுகாப்பதற்குத் துணை நின்ற அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்” என்றார் சரவணன்.

இதனிடையே, இந்த ஆலயம் அருகே மஸ்ஜிட் மடானி பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவிருப்பதாகவும் இதில் பிரதமர் கலந்து கொள்வார் என்றும் அறியப்படுகிறது.

 

 

Exit mobile version