Site icon அநேகன்

கோயில் & மசூதி விவகாரம்: அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் நல்லிணக்கம் காணப்பட்டது! சண்முகம் மூக்கன்

கோலாலம்பூர், மார்ச் 28-அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் கோயில் மற்றும் மசூதி விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதன் வழி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் ஒற்றுமையை மீண்டும் முன்னிருத்தியிருக்கிறார் என்று இவரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டு காலமாக தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை சம்பந்தப்பட்ட சிக்கலுக்கு இறுதியில் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.

“பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆட்சியின் கீழ் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் கடமைகளை உணர்ந்து நாட்டின் சுபீட்சம் மற்றும் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியிருக்கின்றனர்”என்றார் சண்முகம்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சு வார்த்தையின் பலனாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல் )4000 சதுர அடி நிலத்தைக் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. இந்துக்களின் தேவைகள் தொடர்ந்து பேணப்படுவதையே இது பறைசாற்றியுள்ளது.

மஸ்ஜிட் இந்தியாவில் நேற்று மஸ்ஜிட் மடானியின் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. இது சமூகங்களுக்கிடையிலான சுபீட்சத்தை எடுத்துரைக்கும் மற்றுமொரு மைல் கல்லாகும் .

அது ஓர் இக்கட்டான சூழல். எனினும், அனைத்து தரப்பினரும் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் நல்லிணக்கத்திற்கு எந்த பாதிப்பும் வரா வண்ணம் திறம்பட செயல்பட்டனர் என்றார்.

நேற்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் தனிப்பட்ட முறையில் கோயில் நிர்வாகம், டிபிகேஎல் , தனியார் நிறுவனம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் இந்தச் சிக்கலை நன்முறையில் தீர்ப்பதில் உதவியதற்காக பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமூகமான முறையில் பேச்சு வார்த்தைகள் மூலம் சிக்கல்களைக் களைய முற்பட்டால் எத்தகைய சிக்கலையும் நிச்சயமாக நன்முறையில் தீர்த்துவிடலாம்”என்றார்.

எனினும், இந்தத் தீர்வை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு செயல்படக்கூடாது என சண்முகம் நினைவூட்டினார்.

இது மீண்டும் செயல்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரி கிடையாது. நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்துவதில், சட்டத்திற்கு உட்பட்டு சரியான முறையில் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

“இதுபோன்ற சிக்கல்கள் இனி எழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பொறுப்புணர்வு மிக்க மக்களாக, எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாது, நமது உரிமைகள் மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட முறையான வழிமுறைகளைக் கையாள வேண்டும். தவிர, அறிவுப்பூர்வமாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.

 

 

 

Exit mobile version