Site icon அநேகன்

மியன்மார் நிலநடுக்க பேரிடர்:1,000திற்கு மேற்பட்டோர் பலி! 

யங்கூன், மார்ச் 29-மியன்மாரை நேற்று உலுக்கிய நில நடுக்கப் பேரிடரில் பலியானோரின் எண்ணிக்கை 1,002 என தெரிவிக்கப்பட்டது. 

ரிக்டர் அளவையில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 2,376 பேர் காயமடைந்ததாக மியன்மார் தேசிய நிர்வாக மன்ற தகவல் குழுவை மேற்கோள்காட்டி சின்ஹூவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இப்பேரிடரில் உயிரிழந்தவர்கள் தலைநகர் நேய் பி தாவ், சாகேங் மற்றும் யாவ்க்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மியன்மார் தேசிய நிர்வாக மன்ற தகவல் குழுவின் அறிக்கை கூறியது.

காயமடைந்தவர்களில் இதே பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களைத் தேடும் பணி மீட்புப் பணியாளர்களால் தொடரப்படுகிறது.

தொடர்பு துண்டிப்பு காரணமாக இப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த இயலவில்லை.இதனால் இதில் பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மாரில் ஏற்பட்ட மிக மோசமான நில நடுக்கம் இது என வர்ணிக்கப்படுகிறது.

இந்த நில நடுக்கம் காரணமாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டருக்கு அப்பால் பேங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.

இதில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 

Exit mobile version