Site icon அநேகன்

நாட்டிலுள்ள ஆலயங்களில் தொடர்ந்து பிரச்சினைகள்!  இந்து சங்கத்தின் பங்களிப்பு  என்ன ? – வினவுகிறார் சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர், மார்ச் 30-இந்நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் தொடர்ந்து பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றன. இச்சூழல் நம் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பெரும் அவப்பெயரையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக மஇகா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சிவ சுப்பிரமணியம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தலைநகர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய பிரச்சினை குறித்து நாடே அறியும். அதற்கு முன்பு பிரிக்ஃபீட்ஸ்ல் சிவன் ஆலயத்தில் இரண்டு தரப்பினர் நிர்வாக அளவிலும் நிதி அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் பக்தர்களை வெளியேற்றிவிட்டு பூட்டுபோட, இன்னொரு தரப்பினர் பூட்டப்பட்டபூட்டை வெட்டிய காட்சிகளை எல்லாம் பார்த்த சமயப் பெரியவர்களும் ஆன்மீக, அரசியல் தலைவர்களும் மிகுந்த வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளாகினர்.

அதற்கு சில காலத்திற்கு முன்பு சுங்கைவே ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகத்தை ஆர்ஓஎஸ் மூலம் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. அங்கு நிதி மோசடி நடந்ததாகவும் பேசப்பட்டது.

தொடர்ந்து சுங்கைப் பட்டாணி பத்து டுவா அம்மன் ஆலயத்திலும் இதே சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட்டு ஆலய நிர்வாகத்தைக் கைப்பற்றும் அளவுக்கு நிர்வாக தரப்பில் மோதல் ஏற்பட்டது.

இப்படி வரிசையாக நம் ஆலயங்கள் போலீஸ் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சென்று கோயில் பிரச்சினை சம்பந்தமாக புகார் செய்வதும் வழக்காடுவதுமான நிலைமை தொடர்கிறது.

பகாங் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மரத்தாண்டவர் ஆலயப் பிரச்சினை குறித்து நீதிமன்றமே சலிப்படைந்து இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. நீதிபதிகளே தலையிட்டு பரிந்துரை செய்யும் அளவிற்கு ஆண்டாண்டு காலமாக இந்த ஆலய நிர்வாகம் நீதிமன்றத்தையே சுற்றி வலம் வருகிறது.

இந்த ஆலயத்தில் நீண்ட காலமாக இரண்டு நிர்வாக தரப்பினர் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

மற்ற சமய வழிபாட்டு தலங்களுக்கு இது போன்ற சிக்கல் இல்லாத நிலையில் மலேசியாவில் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இத்தகைய பிரச்சினை தொடர்கிறது என்றால் இதை எல்லாம் தீர்க்க வேண்டிய மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது என்று சிவசுப்பிரமணியம் வினவியுள்ளார்.

இந்நாட்டு இந்தியர்களின் தாய்க் கட்சியான மஇகாவின் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் என்பதைவிட மலேசிய இந்து சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும் தனக்கு இத்தகைய நிலைமை மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்து சங்கம் சிறப்பாக செயல்படாவிட்டாலும் ஓரளவுக்காவது விழிப்புடன் இருந்தால் நம் ஆலயங்கள் இப்படி காலமெல்லாம் பிரச்சினையை எதிர்கொள்வதை தடுக்க முடியும்.

நடப்பு தலைமைத்துவம் மீது இந்து சமூகத்திற்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

பல ஆயிரம் இந்து மக்களை அங்கத்தினராகக் கொண்டுள்ள மலேசிய இந்து சங்கம், ஆண்டுக் கூட்டம் நடத்தினால் 200-250 பேர்தான் வருகின்றனர். இந்து சங்க தேசிய பேராளர் மாநாடு என்றால் ஆயிர கணக்கில் சமய அன்பர்களும் பொதுமக்களும் திரள்வது வாடிக்கை. இப்போது உள்ள தலைமையில் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்றால் தலைமை அந்த அளவிற்கு பலவீனமாகவும் மோசமாகவும் இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது என்றார் சிவசுப்பிரமணியம்.

நாட்டின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்தை வழிநடத்துவதற்கு புதிய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும்.

அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு சிறப்பாகவும் சீராகவும் செயல்பட்டால் நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்கு முறையான தீர்வு காண முடியும் என்றார் சிவசுப்பிரமணியம்.

 

 

Exit mobile version