உஜோங் பாசிர் , மார்ச் 31-மலாக்கா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற நிருத்தசமுத்திர ஆர்ட்ஸ் தனது 20வது சலங்கை பூஜையை பிரம்மாண்டமான முறையில் நடத்தியது.
இந்நிகழ்ச்சி உஜோங் பாசிரில் உள்ள ஸ்ரீ அம்பாஜி கோவிலில் நடைபெற்றது. இந்திய பாரம்பரிய கலாச்சார அம்சங்களை எடுத்துரைக்கும் ஓர் அற்புத நடன நிகழ்ச்சியாக இது அமைந்தது. அறிமுக இளம் நடனக் கலைஞர்களும் நேர்த்தியான நடனத்தை வழங்கினர்.
ஏற்கனவே தங்கள் சலங்கை பூஜையை முடித்த மாணவர்கள் மூத்த மாணவர்களோடு இணைந்து இந்த நிகழ்வில் சிறந்த படைப்பை வழங்கினர்.
இவர்களின் அபிநயம் பரதநாட்டியத்தின் நுட்பங்களை அழகுற வெளிப்படுத்தின. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது என்றால் மிகையாகாது.
குரு ஸ்ரீமதி சந்தியா சதீஷால் 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிருத்தசமுத்திர ஆர்ட்ஸ் மலாக்காவில் ஒரு புகழ்பெற்ற நடனப் பள்ளியாக முத்திரை பதித்துள்ளது.
மலாக்கா, ஆயர் குரோவில் அமைந்துள்ள இந்த நடனப் பள்ளி கலை வாயிலாக கட்டொழுங்குமிக்க மாணவர்களை உருவாக்கிய பெருமையையும் கொண்டுள்ளது.
இன்றுவரை இப்பள்ளியில் பல மாணவர்கள் தங்கள் சலங்கை பூஜையை வெற்றிகரமாக முடித்த வேளையில் ஒரு சிலர் அரங்கேற்றத்தையும் முடித்துள்ளனர்.
2023 முதல், குரு சந்தியா சதீஷ் டுரியான் துங்கலில் தடிகா ஜெனரல் ஜே ஜூனியர் வகுப்புகளை நடத்தி வருகிறார். பாலர் பள்ளி மற்றும் நிருத்தசமுத்திர கலைகள் வாயிலாக மாணவர்கள் பலர் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
குருவும் அவரின் திறமையான மாணவர்களும் பல கலாச்சார மற்றும் அதிகாரப்பூர்வ விழாக்கள், நிதி திரட்டும் நிகழ்வுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
குரு சந்தியா சதீஷ் தனது 4 வயதிலேயே பரதநாட்டிய உலகில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு இந்தியாவில் கலாக்ஷேத்ரா மற்றும் கலாமண்டலத்தைச் சேர்ந்த சில சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றார்.
பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கும் இவர் ஒரே நேரத்தில் மோகினியாட்டம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றையும் கற்றுக்கொண்டு தனது மாணவர்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடுத்து இக்கலைகளின் மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

