Site icon அநேகன்

நோன்பு பெருநாளை ஒற்றுமை உணர்வோடு கொண்டாடுவோம்! 

ஷா ஆலம், மார்ச் 31-இன்று கொண்டாடப்படும் நோன்பு திருநாளை ஒற்றுமையுடன் கொண்டாடி மகிழும்படி சிலாங்கூர் வாழ் முஸ்லீம் சமூகத்தினரை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கேட்டுக்கொண்டார்.

உலக மற்றும் உள்நாட்டு சவால்களை நாம் எதிர்நோக்கிய போதிலும் இந்தத் திருநாளில் ஒருவர் மற்றொருவர் மீது அன்பை பரிமாறிக் கொள்வது அனைவரிடத்திலும் ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் என்று மாநில மனித வள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினரான பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.

நோன்பு பெருநாளைக் கொண்டாடும் சிலாங்கூர் மக்கள் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.

“சமயம் கற்றுக் கொடுத்திருக்கும் நல்ல பண்பு நெறிகளை கடைபிடித்து நமது பலவீனங்களைச் சரி செய்து சிறந்த மனிதராக வாழ்வோம் “என்றார் அவர்.

“மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எனும் வகையில் மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு தோள் கொடுத்து வருகிறோம்.மாநில அரசின் பல்வேறு உதவி திட்டங்கள் அவர்களைச் சென்று சேர்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்”என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த நோன்பு பெருநாளையொட்டி அனைவரிடத்திலும் சுபீட்சத்தைப் பேணிக் காப்போம் என்றார்.

அதே வேளையில், தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இப்பெருநாள் காலங்களில் சாலைகளில் மிகவும் கவனமுடன் பயணம் செய்யும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.

இந்த நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடனும் மிதமான முறையிலும் கொண்டாடும்படி முஸ்லிம் அன்பர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version