கோலாலம்பூர், ஏப். 3-
‘தனிமரம் தோப்பாகாது’ என்பதற்கொப்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் மட்டுமே பிபிபி வலுவான ஒரு கட்சியாக உருவெடுக்க முடியும் என்று இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்தார்.
“கட்சியின் இலக்கை தனி மனிதனாக என்னால் அடைய முடியாது. இதற்கு உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் பிபிபி மற்ற கட்சிகள் மத்தியில் பீடு நடை போட முடியும்”என்றார்.
தலைநகர், செந்தூல் வாலையிலை உணவக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தமது 59ஆவது பிறந்த நாள் விழாவில் உரை நிகழ்த்துகையில் டத்தோ லோகபாலா இதனைத் தெரிவித்தார்.
இவரின் பிறந்தநாள் விழாவை சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் டாக்டர் லோக பாலாவின் குடும்பத்தினருடன்
பிபிபி விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரன், சிகாம்புட் தொகுதி தலைவர் டத்தோ வினோத், பிபிபி கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், துணைத் தலைவர் குமார், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, மாநில மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
டத்தோ வினோத் தலைமையிலான பாடகர்களின் படைப்பு நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
‘காலங்களில் அவள் வசந்தம்’ எனும் பழைய பாடலோடு ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’எனும் 80 ஆம் ஆண்டு பாடலையும் பாடி வந்திருந்தோரை அசத்தினார் டத்தோ லோகபாலா.

