Site icon அநேகன்

சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு இஸ்தானா நெகாராவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு! 

கோலாலம்பூர், ஏப். 16-மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு மூன்று நாள் வருகை மேற்கொண்டிருக்கும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கு இஸ்தானா நெகாராவில் அரசாங்க வரவேற்பு நல்கப்பட்டது. 

அதிபர் ஸீ ஜின்பிங்கை மாமன்னர் சுல்தான் இப்ராகிம் காலை மணி 10.30க்கு வரவேற்றார்.இஸ்தானா நெகாரா அணிவகுப்பு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ அகமது ஜாகிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தொடக்க நிகழ்ச்சியாக அரச மலாய் ராணுவ இசைக்குழுவால் இரு நாடுகளின் தேசிய பண் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து, சீன அதிபரை அதிகாரப்பூர்வமாக வரவேற்கும் வகையில் அரச ராணுவத்தின் 41 ஆவது பட்டாள வீரர்கள் 21 துப்பாக்கி வேட்டுகளைக் கிளப்பினர்.

சீன அதிபர் பின்னர் மேஜர் முகமது வகியுடின் அப்துல் ரஹ்மான் தலைமையிலான சுங்கை பீசி முதன்மை மலாய் ராணுவ முகாமின் முதலாவது பட்டாள அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பிரதான மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

 

 

Exit mobile version