கோலாலம்பூர், ஜூலை 18-
பி.எஸ்.எம். எனப்படும் மலேசிய சோஷலிசக் கட்சியின் தேசியத் தலைவராக டாக்டர் முகமட் நசீர் ஹஷிம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் நடந்து முடிந்த கட்சித் தேர்தலில், டாக்டர் நசீர் பெரும்பான்மை பேராளர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு பெற்றார்.
சிரம்பானில் நடந்த கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில், 2017/2019ஆ-ம் ஆண்டுக்கான புதிய செயலவையினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரஸ்வதி முத்து மீண்டும் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜன் ஆறுமுகம் தலைமை செயலாளர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். வழக்குரைஞர் கே.எஸ்.பவாணி கட்சியின் புதிய துணைச் செயலாளராகத் தேர்வு பெற்றார். பொருளாளர் பதவிக்கு சோ சொக் ஹுவா மீண்டும் தேர்வு பெற்றார்.
மலேசியாவில் பாட்டாளி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தொடக்க காலம் முதல் இன்று வரை போராடி வரும் ஒரே கட்சியாக பி.எஸ்.எம். விளங்குகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயலாளர் ஆ.சிவராஜன் தெரிவித்தார். மேலும், இத்தேர்தலில் தங்கள் கட்சியின் கை சின்னத்திலேயே போட்டியிடவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
