குவாந்தான், ஜூன் 11-
பகாங் மாநிலத்தில் மின்னியல் சிகரெட் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில இஸ்லாமிய மத விவகாரங்கள், கிராமப்புற மேம்பாடு மற்றும் பூர்வ குடிமக்கள் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சையத் இப்ராஹிம் சையத் அஹமத் கூறினார்.
இன்று பகாங் மாநில அரச முத்திரை காப்பாளரின் அலுவலகம் மின்னியல் சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின்னியல் சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்யக் கோரி மந்திரி பெசார் அலுவலகம் மார்ச் 3-ஆம் தேதி பகாங் மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக சையத் இப்ராஹிம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மே 14-ஆம் தேதி பகாங் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இவ்விவகாரத்திற்கு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புதல் வழங்கியதாகவும் மாநில இஸ்லாமிய சமய விவகார துணைக் குழு கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

