கோலாலம்பூர், ஜூன் 20-
பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சமர்ப்பிக்கும் விவகாரம் குறித்து கவலைகளை எழுப்பியதற்காக, போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்ட பஹாங் ம.சீ.ச. இளைஞர் பிரிவு தலைவர் வோங் சியூ முன்னுக்கு, ம.இ.கா. இளைஞர் பிரிவு இன்று ஆதரவு தெரிவித்தது.
தொடர்பு அமைச்சு, கேள்விகளை எழுப்புபவர்களை விசாரிக்க போலீஸை பயன்படுத்துவதற்கு பதிலாக, மக்களுக்கு வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
மக்களின் கவலைகளை வெளிப்படுத்துவதற்காக இளம் தலைவர்கள் குறிவைக்கப்படுவது, மிரட்டல் போன்ற தோற்றத்தையும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றது.
வோங், தனியுரிமையை மீறக்கூடிய சாத்தியம் உள்ள ஒரு கொள்கையை மட்டுமே கேள்வி எழுப்பியதாக அர்விந்த் கூறினார்.
முன்னதாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பயனர்களின் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டு விவரங்களை சமர்ப்பிக்குமாறு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (MCMC) வழங்கிய உத்தரவை கேள்வி எழுப்பும் வகையில், வோங் டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், மக்களின் பேச்சுரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அர்விந்த், வோங் மீதான விசாரணை மலேசியா மடானியின் உணர்வை களங்கப்படுத்துவதாக கூறினார்.
ஆகவே, வோங்கிற்கு எதிரான விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கேள்வி கேட்பது ஒன்றும் குற்றமல்ல எனவும் அர்விந்த் குறிப்பிட்டார்.

