Site icon அநேகன்

ஆபாச சைகையைக் காட்டிய ஓட்டுநர்; விரைவு பேருந்து நிறுவனத்திற்கு ஒரு மாதத் தடை!

கோலாலம்பூர், ஜூன் 25-

நெடுஞ்சாலையில் அபாயகரமாக பேருந்தை செலுத்தியதோடு, மற்றொரு வாகன ஓட்டுநரை நோக்கி ஆபாச சைகை காட்டிய விரைவு பேருந்து ஓட்டுநரின் செயல் குறித்த 30 வினாடிகள் கொண்ட காணொலி போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் கவனத்திற்கு வந்தது.

அது தொடர்பில், விரைந்த நடவடிக்கை எடுக்க, அவர் சாலை போக்குவரத்து துறை – JPJ மற்றும் தரை பொது போக்குவரத்து நிறுவனம் – APAD ஆகியவற்றிற்கு உத்தரவிட்டார்.

அதற்கடுத்து, சம்பந்தப்பட்ட விரைவு பேருந்து நிறுவனத்திற்கு ஜூலை மாதம் முதல் ஒரு மாத காலத்திற்கு APAD இயக்கத் தடை விதித்தது.

சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயணிகள் மற்றும் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பை பாதிக்கக்கூடிய பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்து நிறுவனங்கள், பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித அலட்சியமும் காட்டப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அமைச்சர் கூறினார்.

Exit mobile version