சுங்கை பூலோ, ஜூலை 4-
சுங்கை பூலோ மருத்துவமனையில் 300 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க 3 மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒரு மருத்துவ நிபுணர் மட்டுமே இருப்பதாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட தகவல் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
இந்த மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை பிரச்சினையை சுகாதார அமைச்சு கருத்தில் கொள்வதாக தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சை பிரிவில் 300 நோயாளிகளைக் கவனிக்க 4 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.
அந்த எண்ணிக்கையானது நோயாளிகளுடன் வந்த குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
குறிப்பிட்ட அந்த தினத்தில் 158 நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக அமைச்சு விளக்கமளித்தது .
அதே வேளையில், நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலையைத் தாங்கள் புரிந்து கொள்வதாகவும் தெரிவித்தது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுங்கை பூலோ மருத்துவமனையில் 300 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மூன்று மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஒரு மருத்துவ நிபுணர் மட்டுமே இருப்பதாக இந்த மருத்துவமனையின் அறிவிப்பை சமூக ஊடக பதிவாளர் ஒருவர் அண்மையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதோடு அதில் பிரதமர் அன்வார், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்லி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

