Site icon அநேகன்

ஜோகூர் பாருவில் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு, மூவர் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 5-

ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள கெலாங் பாத்தா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலும், சுல்தானா அமினா மருத்துவமனையில் அடையாள ஆவணங்கள் இன்றி ஓர் ஆடவரின் சடலம் கைவிடப்பட்டுள்ளது குறித்தும் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

வியாழக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் மருத்துவமனையில் ஒரு ஆடவரின் உடல் கைவிடப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததாக, ஜோகூர் போலீஸ்த் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

உடலில் பல பகுதிகளில், துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளில், இரண்டு நபர்கள் கருப்பு நிற காரில் வந்து உடலை கைவிட்டு சென்றது தெரியவந்தது.

கைரேகை பரிசோதனையில், இறந்தவர் கெடா மாநிலத்தின் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த 42 வயது ஆடவர் எனவும், அவர் மீது நான்கு முந்தையக் குற்றப் பதிவுகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

உடற்கூறு ஆய்வில், மார்பு மற்றும் வயிற்றில் பல துப்பாக்கிக் குண்டு காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாக, டத்தோ குமார் கூறினார்.

முன்னதாக, அதே நாள் நள்ளிரவு மணி 12.12 அளவில், கெலாங் பாத்தாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

இதில், வாள்களை ஏந்திய ஒரு கும்பல், துப்பாக்கி வைத்திருந்த மற்றொரு கும்பலை தாக்கியது. இதன்போது பல துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக போலீஸ் தெரிவித்தது.

வியாழக்கிழமை மாலை 7 மணியளவில், ஜோகூர் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் இஸ்கண்டார் புத்ரி போலீசும், கோலாலம்பூரின் டாங் வாங்கி பகுதியில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர். அதில், ஒருவர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இந்திய நாட்டவர் ஆவார்.

கைது நடவடிக்கையின்போது, ஒரு க்ளாக் 19 வகை துப்பாக்கி, ஆறு 9மிமீ தோட்டாக்கள், ஒரு கருப்பு நிற ஹோண்டா அக்கோர்ட் கார், தோட்டாக்களின் கிளிப் ஆகியவற்றை போலீஸ் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனிப்பட்ட பாதுகாவலராக பணியாற்றுபவர் மற்றும் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றவர் என்றாலும், அந்த உரிமத்தின் நிலை குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் என டத்தோ குமார் தெரிவித்தார்.

 

Exit mobile version