கோலாலம்பூர், ஜூலை 15-
மலேசியாவில் இந்திய சமூகம் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு வருவது பற்றி மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கும், வளப்பத்திற்கும், மேம்பாட்டிற்கும் பல தசாப்தங்களாக இந்திய சமூகம் தன்னலமற்ற பங்கினை ஆற்றிய போதிலும், தேசிய மேம்பாட்டு நீரோட்டத்தில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டே வந்துள்ளது என்று மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் எஸ்.பி.புனிதன் குறிப்பிட்டார்.
அரசாங்கம் 13ஆவது மலேசிய திட்டத்தை (RMK13) தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், தேசிய கொள்கைகளில் இந்திய சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டப்படுவது அவசியமாகிறது.
பல தசாப்தங்களாக, இந்திய சமூகத்தின் தேவைகள் மற்றும் போராட்டங்கள் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. மேலும், மலேசிய இந்திய மேம்பாட்டு திட்டங்கள் (புளூபிரிண்ட்) கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மற்ற சமூகங்களுக்கு வாய்ப்புகள், சலுகைகள் தரப்படும் என்ற வாக்குறுதிகள் கானல் நீராகவே மாறிவிட்டன.
இந்திய சமூகத்தில் அவல நிலையை அரசு மேம்படுத்தத் தவறிய காரணத்தினால் பல இந்திய குடும்பங்கள் கல்வியின்மை, வேலையின்மை, வருமானமின்மை, பொருளாதாரமின்மை போன்ற குறைபாடுகளினால் சிக்கித் தவித்து வருகின்றன.
சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் , இந்திய சமூகம் நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை ஆற்றியுள்ளது. காட்டைத் திருத்தி, நாட்டின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி பல்வேறு வகையில் நாடு துரித வளர்ச்சி அடைய பாடுபட்டதில் இந்தியர்களின் அர்ப்பணிப்பானது வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
மலேசியா பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டதில் இந்தியர்களின் உழைப்பு யாருக்கும் சளைத்ததல்ல. எனவே, இதற்கு ஓர் அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்திய சமூகம் நிறைவான முன்னேற்றம் அடைய 13ஆவது மலேசிய திட்டம் வடிவமைக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்திய மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்தோங்க மெட்ரிகுலேஷன் கல்விக்கு அதிகமான இடங்களை ஒதுக்க வேண்டும். இந்திய மாணவர்கள் முழு அரசாங்க உதவித் தொகையுடன் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடர வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மலிவு விலை வீட்டு வசதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலம் இந்திய சமூகத்தின் சமூகக் கட்டமைப்புக்கு உதவும் வகையில் திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
இந்திய சமூகம் இந்நாட்டில் நல்வாழ்வு பெற நியாயம், நீதி மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றை நாங்கள் கோருகிறோம்.
13ஆவது மலேசிய திட்டம் வெறும் ஆவணமாக இல்லாமல் இந்திய சமூகத்தை ஏற்றம் காணத் தூண்டுதலாக இருக்க வேண்டுமென புனிதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-பொன் முனியாண்டி

