பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15-
பக்காத்தான் ஹராப்பான் கட்சி தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளதற்குப் பல முன்னோடித் தலைவர்களின் ஆக்கப்பூர்வ, தன்னலமற்ற சேவையே உந்து சக்தியாக இருந்தது என்று இக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் இப்ராஹிம் ஓரினச் சேர்க்கை குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கட்சிக்கு எதிர்காலமே இல்லையென்றும், பாஸ் கட்சியோடு கூட்டணி இல்லையென்றால் 14ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆர் மண்ணைக் கவ்வும் என்றும் பல்வேறு தரப்பினர் சுடு சொற்களால் ஆராதித்ததாக நிக் நஸ்மி சுட்டிக்காட்டினார்.
பல்வேறு எதிர்ப்புகள், தடைகளைத் தகர்த்தே பிகேஆர், ஜசெக, அமானா, பின்னர் பெர்சத்துவோடு இணைந்து 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், 65 ஆண்டு கால தேசிய முன்னணியின் ஆட்சியைக் கவிழ்த்து, பக்காத்தான் ஹராப்பான் அரியணை ஏறியதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் முடியவே முடியாது என்ற எண்ணைத்தைத் தவிடு பொடியாக்கி, ஆட்சியைக் கைப்பற்றியதில் ரபிஸி ரம்லி போன்ற தலைவர்களின் அயராத உழைப்பே காரணம் என்றும் நிக் நஸ்மி புகழாரம் சூட்டினார்.
-பொன் முனியாண்டி

