கோலாலம்பூர், ஜூலை 16-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிக் ஆடம்ஸை மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்நியமனத்தைச் சாடிய டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினரும், அனைத்துலக விவகார செயலாளருமான கஸ்தூரி பட்டோ, மலேசியாவின் நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளதாக அறிக்கையொன்றில் கூறினார்.
2021இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற நிக் ஆடம்ஸ், இஸ்லாமிய வெறுப்பு மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிட்டவர்.
“இத்தகைய பாகுபாட்டு கருத்துகள் மலேசியாவில் ஏற்கப்படாது. ஒரு தூதர் இரு நாடுகளுக்கு இடையிலான பாலமாக, மனித உரிமைகளை மதிப்பவராக இருக்க வேண்டும்,” என்று கஸ்தூரி வலியுறுத்தினார்.
மலேசியா-அமெரிக்க உறவு வர்த்தகம், கலாசாரம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வலுவாக உள்ளது. ஆசியான் தலைமையை ஏற்றுள்ள மலேசியாவுக்கு தகுதியான தூதர் அவசியம்.
மலேசியாவின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, நிக் ஆடம்ஸ் நியமனத்தை அதிபர் டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கஸ்தூரி கேட்டுக்கொண்டார்.

