Site icon அநேகன்

சக நாட்டவர் கொலை:  இந்தியப் பிரஜைக்கு 35 ஆண்டு சிறை! 

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21-ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில், தூங்கிக் கொண்டிருந்த சக நாட்டவர் ஒருவரை சுத்தியலால் தலையில் பல முறை கடுமையாகத் தாக்கி  மரணம் விளைவிக்கக் காரணமாக இருந்த கே.அழகேசன் என்பவரின் 38 ஆண்டு சிறை தண்டனை 35 ஆண்டுகளாக மேல் முறையீட்டு நீதிமன்றம் குறைத்தது.

2020 செப்டம்பர் 9 ஆம் தேதி சுகன் கணேசன் என்பவரைக் கொலை செய்த வழக்கில் அழகேசனுக்கு உயர்நீதிமன்றம் 38 ஆண்டு சிறை தண்டனையையும் 15 பிரம்படியையும் விதித்திருந்தது.

அத்தீர்ப்பினை எதிர்த்து செய்து கொண்ட மேல் முறையீட்டை விசாரித்த மேல் முறையீட்டு நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு, மேற்கண்ட 38 ஆண்டு சிறை தண்டனையை 35 ஆண்டுகளாகவும் 15 பிரம்படிகளை 12ஆகவும் குறைத்துத் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையானது மிகக் கடுமையானதாகவும் குற்றவாளி இளம் வயதானவர் என்பதாலும், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாலும் அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டதாக மேல் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.

-பொன் முனியாண்டி

 

Exit mobile version