கோலாலம்பூர், ஆக. 2-
வேலை வாய்ப்புகள் மற்றும் வீடு வாடகை விளம்பரங்களில் இடம்பெறும் இனப்பாகுபாடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரிய முறையில் விவாதித்து, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென மஹிமா (மலேசியா இந்து கோயில்கள் மற்றும் இந்துமத அமைப்புகளின் பேரமைப்பு) தலைவர் டத்தோ ந. சிவக்குமார் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தைப் புக்கிட் பென்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷர்லினா அப்துல் ரஷித் வெளிப்படியாக பேசியதற்கு அவர் ஆதரவு தெரிவித்தார். “மலேசியர்களை நீண்ட காலமாகக் காயப்படுத்தும் இந்த பிரச்சினையை மிகக் குறைந்த தலைவர்களே இதுவரை பேசியுள்ளனர்,” என்பதையும் சிவக்குமார் சுட்டிக்காட்டினார்.
“இனம், மொழி அடிப்படையாகக் கொண்டு வேலை வாய்ப்புகள் மற்றும் வீடு வாடகைகளுக்கான விளம்பரங்களில் விதிக்கப்படும் வரம்புகள் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட வழிவகுக்கின்றன. இது சமத்துவ மலேசியாவிற்கு விரோதமானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையை மாற்றுவதற்காக, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்தில் தங்களது கருத்தை முன்வைத்து, அதை சட்டரீதியாக மாற்ற முனைவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மடானி அரசின் ஒரு அங்கமாக இருக்கும் ஜசெக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஷர்லினா, தனது கருத்தை கட்சியின் தலைமைத்துவத்திற்கும் கொண்டு சென்று, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.
“சமூகத்தில் நீண்ட காலமாக வேரூன்றியுள்ள இனப்பாகுபாடு எனும் சிக்கலைச் சட்டத்தால் ஒழிக்க நேர்மையான செயல் தேவைப்படுகிறது,” என்றார் அவர்.

