ஈப்போ, ஆக.2-
இந்து மதத்தை அவமதித்தவர்கள் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அரசின் 3R (மதம், இனம், அரசியல்) நடைமுறைக்கு உண்மையான மதிப்பும் செயல் மனப்பான்மையும் இல்லையெனச் சுட்டிக்காட்டுவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
“நம் மதத்தை இழிவுபடுத்தி பேசியவர்கள் தண்டிக்கப்படவில்லை. இது இரட்டை நிலைத்தரத்தின் வெளிப்பாடாகும்,” என அவர் கண்டனம் தெரிவித்தார்.
“மஇகா என்ன செய்தது?” என கேட்பவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக தாங்கள் என்ன சாதித்திருக்கின்றனர் என்பதை முதலில் பரிசீலிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மஇகாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும் போது, “சமுதாய நலனை அடிப்படையாகக் கொண்டு, இனி வரும் காலத்தில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயாராக உள்ளது,” என அவர் உறுதியாக கூறினார்.
“இதற்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்களா?” என 79 ஆவது பேராக் மாநில மஇகா பேராளர் மாநாட்டில் அவர் கேட்டபோது, கூட்டத்தில் இருந்த பேராளர்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்தனர்.
மாநாட்டின் பேராக் மாநில மஇகா தலைவர் தான்ஶ்ரீ ராமசாமி, கட்சித் தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இம்மாநாட்டில் 1000க்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொண்டார்கள்.

