Site icon அநேகன்

பொது விவாதக் கருத்தரங்கில் நஜீப் கலந்து கொள்ள வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-

ஆகஸ்டு 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் பொது விவாதக் கருத்தரங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கலந்து கொள்ள வேண்டுமென துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கருத்தரங்கில் தம்மீது கூறப்படும் 1990க்ளின் நடந்த போரெக்ஸ் அந்நிய நாணய முதலீட்டில் இழப்பு, தமது பிள்ளைகளின் சொத்து நிலவரம் குறித்து விளக்கப் போவதாகவும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் தொடுக்கும் எந்தவித கேள்விக்கும் தாம் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே போன்று, பிரதமர் நஜீப் அந்தக் கருத்தரங்கங்கில் கலந்து கொண்டு 1எம்டிபி பற்றி விளக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் தொடுக்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க வேண்டுமென்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கருத்தரங்கு ஜுன் 11ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது ஆகஸ்டு 13ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. அதன் நெறியாளராக பெர்சத்து இளைஞர் பிரிவின் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் பணியாற்றுவார்.  நஜீப் அதில் கலந்து கொண்டால் தற்போதைய அரசின் நடவடிக்கையின் சீர்கேடுகளைப் பற்றி கேள்வி எழுப்பப் போவதாகவும் மகாதீர் குறிப்பிட்டார்.

தாம் தற்போது எதிர்க்கட்சிக் கூட்டணியின் அவைத் தலைவராக இருப்பதாகவும் பிரதமர் நஜீப்பிற்கு ஈடாக இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் நஜீப் கலந்து கொண்டு தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நஜீப் கலந்து கொள்ளாவிட்டாலும் அந்தக் கருத்தரங்கு நடந்தே தீரும் என்றும் அது பத்திரிகையாளர்களுடன் நடத்தப்படும் கூட்டம் போன்று இருக்குமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று புத்ரா வாணிப மையத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள நஜீப் சம்மதித்து, பின்னர் பாதுகாப்புக் காரணம் குறித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

அக்கருத்தரங்கில் மகாதீர் 6 நிமிடங்களே பேசிய பின்னர், போலீசார் மண்டபத்தினுள் நுழைந்து அவரைப் பேசுவதிலிருந்தும் தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version