Site icon அநேகன்

யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளை மீண்டும் அமல்படுத்துவீர்! -டத்தோ லோகபாலா வலியுறுத்து

கோலாலம்பூர், நவ. 23-

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் ஆகிய தேர்வுகளை மீண்டும் அமல்படுத்தும்படி அரசாங்கத்தை பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்.

இத்தேர்வுகள் கல்வி அடைவு நிலையை மட்டுமல்லாது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் வெகுவாகப் பாதித்திருப்பதாக அவர் சொன்னார்.

இவ்விரு தேர்வுகளும் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தேசிய மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களில் மாணவர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதாக லோகபாலா குறிப்பிட்டார்.

தேர்வுகள் கட்டொழுங்கு,இடைவிடாத கல்வி மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன. இவை இல்லாத பட்சத்தில் பெரும்பாலான மாணவர்கள் தற்போது படிப்பில் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்றார்.

தேசிய தேர்வு என்பது நுட்ப கற்றல் நடவடிக்கை வழி ஒரு மாணவரின் வளர்ச்சியை அளவிடும் கருவியாகும்.

இது இல்லாதது ஒரு பிள்ளையின் கல்வி மேம்பாட்டைக் கண்டறிய முடியாத இக்கட்டான சூழலை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்திவிடும் என்று பிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற இக்கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“தேர்வுகள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெளிவான, நியாயமான மற்றும் சரியான இலக்கை வகுப்பதற்குத் துணை புரிகின்றன “.

ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிப்படுத்துவதே தேர்வு. மாணவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அல்ல என்பதை லோகபாலா சுட்டிக் காட்டினார்.

“முன்பு இருந்ததைப் போலவே தரமான தேர்வுகளைத் தொடர்ந்து அமல்படுத்தும்படி கல்வி அமைச்சை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” .

இத்தேர்வுகள் வலுவான கல்வி, கட்டொழுங்கு ஆகியவற்றுடன் மலேசிய மாணவர்கள் உலகளாவிய நிலையில் போட்டியிடும் ஆற்றலைப் பெற்றிருப்பதையும் உறுதிப்படுத்தும் என்றார்.

 

Exit mobile version