Site icon அநேகன்

16 வயதுக்குக் குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை: ஃபஹ்மி ஃபாட்சில்

லெம்பா பந்தாய்:

அரசு, 16 வயதிற்கு குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தத் தடை அமல்படுத்தப்படுவதாகவும், சிறுவர்கள் மீது குறிவைத்து நடைபெறும் இணையக் குற்றங்கள், குறிப்பாக இணையத்தின் நிகழும் பாலியல் அச்சுறுத்தல்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையப் பகடிவதை, பாலியல் தொந்தரவு மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், 16 வயதுக்குக் குறைவான இளைஞர்கள் சமூக வலைதளங்களுக்கு முன்கூட்டிய, கட்டுப்பாடற்ற அணுகல் பெறுவது குறித்து அரசு கடுமையான கவலை தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 16 வயதிற்குக் குறைவானவர்கள் சமூக வலைதள கணக்குகள் திறப்பதற்கு தடை செய்யப்படும் என லெம்பா பந்தாயில் இன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் நிறைவு விழாவில் அவர் குறிப்பிட்டார்.

‘மைகாட்’, ‘கடப்பிதழ்’ அல்லது ‘MyDigital ID’ போன்ற அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்கும் முறையைக் கட்டாயமாக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அனைத்து தளங்களும் இதை அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version