Site icon அநேகன்

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திட்டங்களை ஒருங்கிணைக்க சிறப்பு பணிக்குழு அமைக்க துணையமைச்சர் யுனேஸ்வரன் பரிந்துரை

புத்ரா ஜெயா:

கல்வியமைச்சு உட்பட பிற அமைச்சகங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் கீழ் சிறப்பு பணிக்குழு அமைக்க வேண்டும் எனத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் பரிந்துரை செய்தார்.

இந்தச் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டால் , மற்ற அமைச்சகங்களில் முன்னெடுக்கப்படும் மாணவர் நலத்திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய முடியும் என்றும், இதன் மூலம் எந்த மாணவரும் அரசாங்க வாய்ப்புகளிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற , மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் பழனி சுப்பையா மற்றும் துணை செயலாளர் சந்திரசேகரன் ராமையா ஆகியோருடனான சந்திப்பில் துணையமைச்சர் இந்தப் பரிந்துரையை முன் வைத்தார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளிலிருந்து திறமையான விளையாட்டு வீரர்கள், வீரங்கனைகளை அடையாளம் காண ஒரு விளையாட்டு குழு அமைப்பதன் அவசியம் குறித்தும் துணையமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தக் குழு மாணவர்களின் விளையாட்டு திறனை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலை வழங்கி, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கல்வி தொடர்பான முக்கிய அம்சங்களாக ஆர்பிஎம் திட்டச் செயல்பாடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய், ஆங்கில மொழிகளின் புலமை, கதமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட 8 முக்கிய அம்சங்கள் குறித்து மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் பழனி சுப்பையா விளக்கமளித்தார்.

மேலும், தேசிய நூலகம் மூலம் மலேசியா முழுவதும் உள்ள மாணவர்கள் எங்கிருந்தும் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் மாத இதழ்களை இணையவழி மூலம் படிக்கக்கூடிய வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பழனி முன்வைத்தார். இதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மேம்படுவதுடன், கல்வி வளங்களை எளிதாக அணுகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்றார் அவர்.

Exit mobile version