கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (PMKS) எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணவும், அதேவேளை உயர்கல்வி சேர்க்கை முறையில் அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமன் வலியுறுத்தியுள்ளார்.
டிஏபி தலைவர் லிம் குவான் எங் முன்வைத்துள்ள பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான பரிந்துரைகளுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 38 விழுக்காடு பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், உலகளாவிய பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், அதிகரித்த செயல்பாட்டு செலவுகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
e-Invois அமலாக்க வரம்பை ஆண்டுக்கு RM5 மில்லியன் வருமானம் வரை உயர்த்துதல், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு வரி தீர்ப்பாயம் அமைத்தல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான 2 விழுக்காடு EPF பங்களிப்பை ரத்து செய்தல், வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை எளிமைப்படுத்தி டிஜிட்டல் மயமாக்குதல், ஓராண்டு கடன் வட்டி ஒத்திவைப்பு மற்றும் வட்டியில்லா கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவை நடைமுறை சாத்தியமான மற்றும் தாக்கம் மிகுந்த நடவடிக்கைகள் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அரசுப் பல்கலைக்கழக சேர்க்கை முறையிலும் விரிவான சீர்திருத்தம் அவசியம் என வலியுறுத்திய கணபதிராவ், STPM, மெட்ரிகுலேஷன் மற்றும் அசாசி ஆகிய வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளுக்குப் பதிலாக, அனைத்து மாணவர்களும் ஒரே தரநிலையின் அடிப்படையில் மதிப்பிடப்படும் ஒருங்கிணைந்த சேர்க்கை முறையை அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
இந்தியர், சீனர், சபா மற்றும் சரவாக் பூர்வீக மக்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் உயர்கல்வியில் சமமான வாய்ப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், பொருளாதாரம், வரி, தொழிலாளர் மற்றும் கல்வித் துறைகளில் துணிச்சலான கட்டமைப்பு சீர்திருத்தங்களே மலேசியாவின் எதிர்கால வளர்ச்சிக்கும் போட்டித்திறனுக்கும் அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

