Site icon அநேகன்

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 24 விருதுகள் வென்று சாதனை

மலேசிய மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் (MMU), MYSO ஏற்பாட்டில் நடைபெற்ற உலக நிலைத்த வளர்ச்சி இலக்குச் சவால் – 2026 (WDSG 2026) அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கப் போட்டியில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளனர்.

அனைத்துலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இணையவழி மற்றும் நேரடி முறையில் தங்களது புத்தாக்கப் படைப்புகளைப் பகிர்ந்து, நீதிபதிகளின் பாராட்டைப் பெற்றனர்.

மாணவர்களுக்கான புத்தாக்கப் பிரிவில் பிளாட்டினம், சிறப்பு விருது மற்றும் தங்க விருதுகள் உள்ளிட்ட மொத்தம் 14 விருதுகளை மாணவர்கள் தங்களது சிறப்பான புத்தாக்கப் படைப்புகளுக்காக வென்றனர்.

அதேவேளை, ஆசிரியர் பிரிவிலும் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதித்தனர். கற்றல்-கற்பித்தலில் மேற்கொண்ட தனித்துவமான அணுகுமுறைகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் சிறப்பாகப் பங்களித்த ஆசிரியர்கள் 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சு. தமிழ்ச்செல்வி அவர்களும் ஆசிரியர் பிரிவில் தமது புத்தாக்கப் படைப்புக்காக தங்க விருதை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். அவரது வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்தி சிறப்பான அடைவுநிலையைப் பெற்றிருப்பது, பள்ளியின் கல்வி மற்றும் புத்தாக்க வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என தலைமையாசிரியை நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், போட்டியில் சிறப்பான சாதனையைப் படைத்த மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்கள், வெற்றி பெற்ற ஆசிரியர்கள், பள்ளியின் துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. பாலமுருகன் மற்றும் அவரது செயலவை உறுப்பினர்கள், அத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version