கிள்ளான்:
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய உயர்வு மற்றும் 2 விழுக்காடு EPF பங்களிப்பு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.
ஊழியர்களின் நலனையும் ஊதிய உரிமைகளையும் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் குறைந்த லாப வரம்புகளால் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
எனவே, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர் வேலை ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டு, புதிய ஊதிய உயர்வை முதலில் புதிதாகப் பணியமர்த்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் படிப்படியாக அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அணுகுமுறை சட்ட ஆய்வுக்கும் தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்புக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கட்டாய 2 விழுக்காடு EPF பங்களிப்பு முறையையும் மறுஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஊதியம் மட்டுமின்றி ஆட்சேர்ப்புச் செலவுகள், தொழிலாளர் வரி, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான செலவுகள் உள்ளிட்டவற்றையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என்றார்.
தொழிலாளர் நலனையும் உள்ளூர் நிறுவனங்களின் நிலைத்தன்மையையும் ஒருசேரப் பாதுகாக்கும் சமநிலையான கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். இந்த விவகாரங்களில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மற்றும் முதலாளிகள், தொழிலாளர் பிரதிநிதிகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைப்புகளுடனான ஆலோசனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வீ.கணபதிராவ் கேட்டுக்கொண்டார்.

