சுங்கை பூலோ:
வெறும் காகித அளவிலான கொள்கைகளால் மட்டும் பயனில்லாது, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் உண்மையான வளர்ச்சியும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நியாயமான ஊதியம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட வேலைவாய்ப்புச் சூழல் ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று காலை கோத்தா டாமன்சாராவில் நடைபெற்ற ‘மடானி கித்தா’ எனும் மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
அலுவலக அறிக்கைகளையும் புள்ளிவிவரங்களையும் மட்டுமே நம்பியிராமல், களத்திற்குச் சென்று மக்களின் உண்மையான தேவைகளை நேரடியாகக் கேட்டறிவதே ‘மடானி’ அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மட்டும் இருக்கக் கூடாது; மாறாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா, அவர்களுக்குப் போதுமான வருமானம் கிடைக்கிறதா என்பதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது என்றார் அவர்.
வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை, இளைய சமுதாயத்தினருக்குத் தற்காலத் தொழில்துறைக்குத் தேவையான திறன்களை ஊட்டுவதும், ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தங்களைத் தற்காலச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும் என்று ரமணன் சுட்டிக்காட்டினார்.
மாறிவரும் வேலைவாய்ப்புச் சூழலில் வெறும் கல்வித் தகுதிகள் மட்டுமே போதாது என்றும், நடைமுறைத் திறன்களும் தொழில்நுட்ப அறிவும் இன்று மிகவும் அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, தொழிற்கல்வி பயிற்சிக்கு (திவெட்) அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்த அவர், அத்தகைய பயிற்சித் திட்டங்களின் வேலைவாய்ப்புப் பெறுநர் விகிதம் 95 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், முதலாளிகளின் திருப்தி விகிதம் 97.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஒருவர் வேலை பெறுவதுடன் நின்றுவிடாமல், அந்த வேலையில் நிலைத்து நின்று நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என்றார் அவர்.
மேலும், சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (பெர்கேசோ) மூலமாக வேலைவாய்ப்புகளை எளிதாக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 தேசிய பட்டதாரிகள் வேலைவாய்ப்புப் பெருந்திரள் நிகழ்வு போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
சிறு வணிகர்களும் இளம் தொழில்முனைவோரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற மக்கள் குறைகேள் கூட்டத்தில், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களுடன் அமைச்சர் ரமணன் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

